கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
பிஞ்சு மலர்கள்
கொஞ்சும் மொழியில்.....
பாடம் கற்றுத்தந்த
பாடலை
பாங்காய் பாடினர்......
வண்ணங்களை
வார்த்தையில் குழைத்து
வசந்தமாய் வீசினர்.........
"காலைத் தூக்கி
கண்ணில் ஒற்றி
கட்டிக் கொஞ்சும் அம்மா"......
தேனைத் தீயில்
தெளித்ததுபோல்....
மனம் கனத்தது
மெளனமாய் அழுதது....
கண்களில் கண்ணீர்.....
காரணம்.........
பாடிய பாலகர்கள்.....
அம்மாவின்
அரவணைப்பை,
அர்த்தத்தை,
அன்பை,
அறிந்திராத
அநாதை குழந்தைகள்!
Wednesday, May 18, 2005
கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
Posted by கலை at 5/18/2005 07:26:00 AM 5 comments
Labels: சோகம்
Sunday, May 15, 2005
இழப்பு!!!!!!!
இழப்பு!!!!!!!
உறவினை இழக்கையில்,
உள்ளம் உறங்கிப் போகும்......
உணர்வுகளின் கொந்தளிப்பில்,
உதடுகள் கூட ஊமையாகிடும்......
நெஞ்சுக் குழிக்குள்ளே,
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்....
நிழலாய் தொடரும்.....
கனவுகளும் கூட,
கற்பனைகள் இல்லாமல்,
கலங்கிப்போய்,
கண் மூடி கிடக்கும்....
கண்களில் கண்ணீரும்,
காய்ந்து போய் விடும்......
இரவுகளுக்கும், பகல்களுக்கும்,
இடைவெளியே இல்லை,
இரவிலும் உறக்கமில்லை,
இருளே பகலிலுமாய்,
மனம் விரும்பாவிட்டாலும்,
மௌனம் நம்மை,
தனதாக்கிக் கொள்ளும்....
மண்டியிட்டு மௌனம்
மனதுக்குள் உட்கார்ந்து
மங்காத நிகழ்வுகளை
மலை போல காட்டும்....
பரிச்சயமற்ற மௌனத்தால்,
பாறாங்கல்லாய்,
பாரம் ஏறும்...
உடலிலும், உணர்விலும்,
விழுதலில் இருந்து,
எழுவதற்காய்,
மௌனத்தை கேட்க வேண்டும்....
ஏ... மௌனமே பேசி விடு!!!!!
Posted by கலை at 5/15/2005 03:55:00 PM 2 comments
Labels: பாசம்
நெஞ்சம் கனக்கிறது.....
நெஞ்சம் கனக்கிறது.....
"தனியொருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
பாடி வைத்தான்
பாட்டுப் புலவன்
பல கோடி மக்கள்
பட்டினி இருந்தாலும்
வகை வகையாய் சமைத்து நாம்
உண்ணத்தான் செய்கின்றோம்
அதோ அங்கே....
சிதைந்த உடல்கள் - பல
சிதறிக் கிடக்கிறது
கொடூரமான கொலைகள்,
பதைக்க வைக்கும் பாவங்கள்
எல்லாம் அந்த
பெளதீக இரசாயன
கலவைகளின்
கண்மூடித்தனம்தான்
பாடசாலை சிறார்களை
பணயம் வைக்கும் பரிதாபம்
மனிதன் ஒரு மிருகம்
என்பதை
உறுதிப்படுத்தும்
உத்வேக பிறவிகள்
மனித மனங்கள் நாம்
சில கணம் பதைக்கின்றோம்
மேலும் சில கணம் அழுகின்றோம்
ஆனாலும் என்ன...
ஒரு நாள் கழிந்ததும்
துடிப்பு மறைந்ததும்
வழமைக்கு திரும்புகிறோம்
மனித நேயம் கொல்லப்படுவதை
கண்டும் காணாமல் செல்ல
மனதில் ஒரு இசைவாக்கம்
எப்படி வந்தது........
எங்கோ நடக்கிறது
நமக்கில்லை என்று
நம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம்
எப்படி முடிகிறது.....
இன்னிசை ரசிக்கும்
இதயங்கள்
இழவுக் குரலுக்கு
இசைவு பட்டு விடுமோ
மனம் அழுகிறது....
இயற்கை எழில் கொஞ்சும்
உலகமும் ஒரு நாள்
அழுகையின் சத்தத்தில்
அமுங்கிப் போய் விடுமோ
இதயம் பதைக்கிறது.....
காற்று மண்டலமும்
களங்கப் பட்டு
கனத்துப் போய் விடுமோ
எங்கள் மழலைகள்
எலும்புத் துண்டுகளை
கையில் ஏந்தி விளையாடும் நாள்
கன வேகமாய் வந்திடுமோ
கனக்கிறது நெஞ்சம்.....
Posted by கலை at 5/15/2005 03:50:00 PM 2 comments
Labels: சமூகம்
தாய்!!!!!
தாய்!!!!!
கருவறைக்குள் - நீ
கால் பதிக்கும் நாளுக்காய்
காலங்காலமாய்
காத்திருப்பாள்...........
கருவாகி அங்கே - நீ
பதியும் கணம் முதல் - உன் முகம் பாராமலே
கள்ளமில்லா அன்பை
கட்டவிழ்த்து விடுவாள்..........
கருவறை விட்டு வெளியேறி - நீ
கதறி அழ துடிக்கும் அந்த
கடைசி நிமிடங்களில்........
தன் உயிரையே உனக்கு
தாரை வார்க்க
தயாராகிறாள் - அவளே
தாய்!!
Posted by கலை at 5/15/2005 03:48:00 PM 0 comments
Labels: தாய்
மெளனமும் ஒரு மொழி!
மெளனமும் ஒரு மொழி!
இதழ்களை
இறுக மூடி
இதயத்தால் பேசும்
மொழியே மெளனம்
காதலில் மெளனம்,
அழகாய் பேசும்,
ஆயிரமாயிரம்,
கதை பல பேசும்...
அழுகையில் மெளனம்,
சோகத்தை பேசும்,
சொந்தங்கள் மறந்து,
ஆரவாரமாய் பேசும்....
கோபத்தில் மெளனம்,
சினத்தை பேசும்,
சீண்டிப் பார்த்தால்,
கொந்தளித்து பேசும்....
அன்பில் மெளனம்,
உள்ளத்தில் பேசும்,
ஊமையாய் இருந்து,
ஆழமாய் பேசும்.....
வார்த்தைகள் அற்ற
புத்தகம் மெளனம் - ஆனாலும்
வாசிக்க வாசிக்க
வாக்கியங்கள் ஆயிரம்
இன்பத்தில் மெளனம்
இதயத்தால் சுவாசிக்கும்,
துன்பத்தில் மெளனம்
துயரங்களை மூடும்
பேசாத மெளனத்தில் அர்த்தமில்லை,
எனினும்... மெளனமும் பேசும்.....
மெளனம் ஒரு தவம்
ஆழ்ந்து போனால் அமைதி கிட்டும்
Posted by கலை at 5/15/2005 03:45:00 PM 2 comments
Labels: மெளனம்
உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்...
உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்...
கருவே!!!!
என் உறவில் விழைந்த உயிரே!
உலகே எனக்கு உறங்கியிருக்கையில்,
உதிரத்தில் உதித்து, உயிரினுள் உயிரானாய்,
நீ அரும்பிய நாள் முதலாய்,
அழுகின்றேன் ஆனந்தத்தில்,
அலைகின்றேன் ஆகாயத்தில்,
நீ மலரும் நாளுக்காய்,
மயங்கி தவிக்கின்றேன்,
மனம் ஏங்கி துடிக்கின்றேன்,
நீ கருவாய் உருவாகி,
கற்பனைக்கு உரமிட்டு,
கனவுகளை பயிரிட்டாய்,
கவலைகளை போக்க,
களிப்புடனே வந்து விடு,
மருட்டும் பார்வையுடன்,
மங்களமாய் வந்து விடு,
உனக்காக இங்கே.....
உயிரை தாங்கும் உயிர்.........
Posted by கலை at 5/15/2005 03:42:00 PM 2 comments
Labels: பாசம்
உனைக் கண்ட நாள் முதலாய்....
உனைக் கண்ட நாள் முதலாய்....
ஊனில்லை,
உறக்கமில்லை - என்
உயிர் கூட என் வசமில்லை...
உனைக் கண்ட நாள் முதலாய்...
பார்வையிலே பரவசம்,
பழக்கத்திலே நவரசம்,
கலந்து வந்த கலவையாய்,
காதலின் பிரசவம்.....
சுற்றியுள்ளோர் எவரும்,
சுத்தமாய் தெரியவில்லை,
நினைவுகளை எல்லாம் - நீ
நிறைத்தாய் முழுவதுமாய்....
அதிசயமாய் மொட்டு விட்ட கவிதைகள்,
அழகழகாய் மலர்ந்தன கனவுகளில்....
காலை உதிக்க முன்னே
கண் விழிப்பு
உனை நேரில் காண்பதற்காய்.....
மாலை மங்கும் முன்பே,
கண்ணயரத் துடிதுடிப்பு
உனை கனவுகளில் பார்ப்பதற்காய்.....
உதடுகளில்
உன் பெயரின்
உச்சரிப்பு ஓயாமல் ஓயாமல்.....
மனதினிலோ
மௌனமாய் ராகங்கள்
முணுமுணுப்பாய் முணுமுணுப்பாய்.....
முட்டி முட்டி
மோதுகின்ற உணர்ச்சிகள்
நெஞ்சினிலே எப்போதும்,
நீங்காமல் நீங்காமல்.....
தூரத்தில் நீ இருக்கும் வேளைகளில்
தொடுகையே இல்லாத சிலிர்ப்பும்,
தூக்கத்தில் நீ வரும் நேரங்களில்
தொடுதலில் உண்டாகும் களிப்பும்....
வார்த்தைகள் வசப்படாமல்
வருந்தி நிற்கும் தவிப்பும்,
மணிக் கணக்காய் பேசும்போது
மனம் நிறையும் பூரிப்பும்.....
மடல்களில் நீ வரையும்
வண்ணக் கோலங்கள்,
மனம் உருகி நீ சொல்லும்
வார்த்தை ஜாலங்கள்,
எனக்கும் உனக்குமாய்
நீ போடும் பாலங்கள்....
உணர்ச்சிக் கொந்தளிப்பில்
ஊடல்களின் நர்த்தனமும்,
உள்ளங்களின் சங்கமத்தில்
உறவின் நிரந்தரமும்....
நிழல்களும் நீயாய்,
நிஜங்களும் நீயாய்,
நீயே நானாய்,
நானே நீயாய்,
நாமாகிப் போனோம்...
உனைக் கண்ட நாள் முதலாய்....................
Posted by கலை at 5/15/2005 03:38:00 PM 1 comments
Labels: காதல்
வாழ்வு ஒரு வானவில்!!!
வாழ்வு ஒரு வானவில்!!!
அழகான வண்ணங்கள் கண்டு
எண்ணங்கள் இனிக்கும்....
மனம் தயங்கி நின்றாலும்
மயங்கி நிற்கும் இதயம்....
கண் மூடி அனுபவிக்கும்
கலங்கி பரதவிக்கும்....
கண் விழித்து பார்க்கையில் தெரியும்
காண்பது வானவில் என்று
புரியும் அப்போது...
வானவில்லின் இயல்பு
வருவதும் மறைவதும் என்று
எது நிரந்தரம்....
அதை புரிந்து கொண்டால்...
வாழ்வு சுகம் தரும்......
வாழ்வு ஒரு வானவில்!!!
Posted by கலை at 5/15/2005 03:37:00 PM 0 comments
Labels: சோகம்
குழந்தைகள்!!!
குழந்தைகள்!!!
கள்ளமில்லா உள்ளம்,
கவலையில்லா இதயம்,
மலரத்துடிக்கும் அரும்பு,
மழலை பேசும் குறும்பு,
வசந்தம் தரும் தென்றல்,
வண்ணங்கள் நிறைந்த வானவில்,
எல்லாம் கலந்த கலவையாய்,
எம் மனம் கவரும் இனிமையாய்,
வாழ்வின் உயிர்த்துடிப்பாய்,
வளரும் தேவதைகள்!!
Posted by கலை at 5/15/2005 03:35:00 PM 2 comments
Labels: குழந்தை
எது சமுதாயம்??
எது சமுதாயம்??
அவன்,
அவள்,
அவர்கள்....
அல்ல சமுதாயம்.....
நான், நீ, அவர்கள்...
எல்லாம் நிறைந்த,
நாமே சமுதாயம்
Posted by கலை at 5/15/2005 03:34:00 PM 5 comments
Labels: சிந்தனை
இடம் கொடு உயிரே!!!!!
இடம் கொடு உயிரே!!!!!
உன் இதய அறைகளில் ஒன்றில்,
எனக்கும் ஒரு சிறு இடம் கொடு.......
அங்கே ஒளிந்து கொள்கிறேன்,
அந்திய காலம் வரை.......
வெளியே விட்டுவிடாமல்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்.......
இதயத்தின் ஒரு மூலையில் -
உன் இதயத்துடிப்பை உணர்ந்தபடி.......
அமர்ந்து விடுகிறேன்
அங்கேயே நான் - என்
அந்திய காலம்வரை!!!!!!!!!!
Posted by கலை at 5/15/2005 03:33:00 PM 4 comments
Labels: காதல்
நிழலாகும் நிஜம்......
நிழலாகும் நிஜம்......
நிஜங்கள்
நிழல்களாகையில்...
கையில்...
நினைவுச் சின்னங்கள் எதற்கு....
அதுதான்..
நெஞ்சு நிறைய..
நினைவுகள் உண்டே....
Posted by கலை at 5/15/2005 03:32:00 PM 0 comments
Labels: சிந்தனை
வானவில்!!
வானவில்!!
வண்ணங்களை குழைத்து
அங்கே அழகாய்
வானத்தில் தெளித்தது யார்?
வெயிலும் மழையும்
காதலில் நெருங்கி வர....
ஒளிக்கதிர் எனும்
தளிர்க்கரம் நீட்டி.....
மழைத்துளியை
வெயில் இதமாய் தழுவிட.....
ஒளிச்சிதறல்கள் அங்கே...
வானில் தெறித்தது
வண்ண கோலமாய்......
நேரத்தின் அவசரத்தில்...
மழைதுளி - தன்
இனிய அனுபவத்தில்..
தன்னையே இழந்து செல்ல
கோலங்கள் கரைகிறது
துளிகளினூடே........
Posted by கலை at 5/15/2005 03:30:00 PM 0 comments
Labels: அழகு
தூரப்பயணம் செய்!
தூரப்பயணம் செய்!
குறுகிய வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறோம்.....
சுற்றமும், உறவுகளும்-
அதுவே நம், உலகமாய் எண்ணி,
உலகம்.... பரந்தது, விரிந்தது....
வான வீதியில்,
சிறகு விரித்துப் பறக்கலாம்....
உனக்கென மட்டும் எண்ணாமல்,
உலகுக்குமாய் சேர்த்து.......
திறமைகள் உண்டெனில்,
மடமைகள் போக்கி,
துயரங்கள் நீக்கி,
தூரப்பயணம் செய்யலாம்,
மீண்டும் மீண்டும் -
இந்த சிறிய வட்டத்தினுள் -
ஏன் குறுகிய பயணம்?
Posted by கலை at 5/15/2005 03:28:00 PM 0 comments
Labels: சிந்தனை
மனச்சாட்சி பொய் சொல்லுமா?
Posted by கலை at 5/15/2005 03:25:00 PM 0 comments
Labels: சோகம்
உலகம் உருண்டை!
உலகம் உருண்டை!
அன்றொரு நாள் ஆசிரியர் சொன்னார்..
உலகம் உருண்டை என்று.....
நம்பவில்லை நான்...
எங்கோ எப்போதோ சந்தித்த அவளை..
மீண்டும் இங்கே இப்போது சந்திக்க நேர்கையில்
புரிந்தது எனக்கு...
ஆம்.. உலகம் உருண்டைதான்...
Posted by கலை at 5/15/2005 03:16:00 PM 1 comments
Labels: காதல்
ஏழ்மை!!
ஏழ்மை!!
குற்றுயிராய் இரை தேடும்,
குழந்தை உடலொன்று,
கூனல் நிமிர்த்தாமல் நகர்கிறது அங்கே.....
பிரியாமல் அவ்விடத்தில்,
பிணம் தின்னும் கழுகொன்று,
பீதியை ஏற்படுத்தி காத்திருக்கு இங்கே....
கலைந்த தலையும்,
கவலை தோய்ந்த கண்களுமாய்,
காய்ந்த வயிறுகளும் வீழ்கின்றன அங்கே....
பொன்னுக்கும் பொருளுக்கும்,
பொறாமையுடன் பதவிக்கும்
போட்டியிடும் கூட்டமொன்று வாழ்கிறது இங்கே....
நெஞ்சை உருக்குகின்ற
நிகழ்ச்சிதனை கண்டும்,
நெகிழாத மனம் கொண்டு,
நிற்பவரும் உண்டு....
உள்ளத்தால் உருகி நின்று,
உணர்வாலே நெருங்கி வந்து,
துயருறுவோர் நிலை கண்டு
துடிப்பவரும் உண்டு..
Posted by கலை at 5/15/2005 03:11:00 PM 0 comments
Labels: சமூகம்